Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 14 செப்டம்பர், 2011

அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில்

மூலவர்:தெட்சிணாமூர்த்தி
உற்சவர்:-
அம்மன்/தாயார்:-
தல விருட்சம்:ஆலமரம்
தீர்த்தம்:-
ஆகமம்/பூஜை :காமிகம்
பழமை:500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:கோவிந்தவாடி
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு 
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்:
இத்தலத்தில் கைலாசநாதர், அகிலாண்டேஸ்வரி, சந்தன குங்கும கோவிந்தன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
பெருமாள் தனிச்சன்னதியில் மேற்கு பார்த்தபடி இருக்கிறார். அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகியோர் உள்ளனர்.
கோவிந்தனாகிய திருமால், சிவனை துதித்து பாடல்கள் பாடி  வழிபட்ட தலம் என்பதால் "கோவிந்தபாடி' எனப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில் "கோவிந்தவாடி' என்று மருவியது. 
தல சிறப்பு:
நாகதேவதை தனது இரண்டு கால்களையும் பாதி மடக்கியநிலையில் வித்தியாசமாக காட்சி தருகிறார். இங்குள்ள விநாயகர் ஆவுடையார் மீது அமர்ந்தபடி "ஆவுடை விநாயகர்' என்ற திருநாமத்துடன் இருப்பது சிறப்பு.
நேர்த்திக்கடன்:
அம்பாளுக்கு சுமங்கலி பூஜை செய்து வழிபட்டால் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை. இங்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகள் நிறைவேறியவர்கள் தெட்சிணாமூர்த்திக்கு "தேங்காய் தீபம்' ஏற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
சிவாலயங்களில் தெட்சிணாமூர்த்தி தனிச்சன்னதியில் இல்லாமல் கோஷ்டத்தில்தான் (கருவறைச்சுவரில்) காட்சி தருவார். ஆனால் இங்கு தனிக்கருவறையில் மூலவராக தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு பின்புறத்தில் கைலாசநாதரும் தனியே உள்ள கருவறையில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். அதாவது ஒரே விமானத்தின் கீழ் உள்ள இரண்டு கருவறைகளின் இருபுறமும் சிவனும், தெட்சிணாமூர்த்தியும் இருக்கின்றனர். இது சிறப்பான அமைப்பாகும். இங்கு தெட்சிணாமூர்த்தியே பிரதானமானவர் என்பதால் ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகத்தின் போதுகூட இவருக்கே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

சிவனே, தெட்சிணாமூர்த்தியாக இருந்து உபதேசம் செய்தார் என்பதால் இவர் நெற்றியில் மூன்றாம் கண், தலையில் பிறைச்சந்திரன் மற்றும் கங்காதேவியுடன் காட்சி தருகிறார்.தெட்சிணாமூர்த்தி இங்கு கூர்மம் (ஆமை), எட்டு யானைகள், பஞ்ச நாகங்கள், சிம்மம், அஷ்டதிக்பாலகர்கள் ஆகியோர் பஞ்ச ஆசனங்களாக இருக்க அதன் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பெருமாளுக்கு தனித்து காட்சி தந்தவர் என்பதால் இவருக்கு மேலே கல்லால மரம் இல்லாமல் "கைலாயம்' போன்ற அமைப்பில் மண்டபம் மட்டும் இருக்கிறது. இவரது காலுக்கு கீழே வலதுபுறம் திரும்பியபடி இருக்கும் முயலகன், இங்கு இடது பக்கம் திரும்பியபடி இருக்கிறான்.

விபூதிக்காவடி: சித்திரையில் நடக்கும் திருவிழாவின்போது வித்தியாசமாக தெட்சிணாமூர்த்திக்கு "விபூதிக்காவடி' எடுத்து வழிபடுகின்றனர். அந்த விபூதியையே சுவாமிக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக தருகின்றனர். இதனை நீரில் கரைத்துக் குடித்தால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை இருக்கிறது. "விபூதி' சிவனது சின்னம் என்பதை உணர்த்தும் விதமாக இங்கு தெட்சிணாமூர்த்திக்கு காவடி எடுப்பது புதுமையான வழிபாடாகும்.

சந்தன, குங்கும கோவிந்தன்: கோயில்களில் பெருமாளுக்கு திருமண்ணால் நாமம் போட்டுத்தான் அலங்காரம் செய்வர். ஆனால், இங்கு சந்தனம், குங்குமத்தையே நாமம் போல நெற்றியில் பூசி வழிபடுகின்றனர். சிவதீட்சை பெற்ற பெருமாள் என்பதால் இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்.

இத்தலத்தில் தெட்சிணாமூர்த்திக்கு இடப்புறத்தில் சிவன், கைலாசநாதராக அகிலாண்டேஸ்வரி அம்பாளுடன் பிரகார தெய்வமாக இருக்கிறார். ஆதிசங்கரர் சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளார். இவருக்கு அர்த்தமண்டபத்தில் தனிச்சன்னதி உள்ளது. பிரகாரத்தில் நாகதேவதை, ராகு, கேது ஆகியோர் ஒரே சன்னதியில் இருக்கின்றனர்.

நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தாமாகவே பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இதனால் தோஷங்கள் நீங்குவதாக நம்புகின்றனர்.
தல வரலாறு:
ஒருசமயம் மகாவிஷ்ணு பக்தன் ஒருவனை காக்க போரிட்டபோது, அவரது சக்கரம் அங்கு தவம் செய்து கொண்டிருந்த துதீசி எனும் முனிவர் மீது பட்டு, முனை மழுங்கியது. தனது முதன்மையான ஆயுதமான சக்கரம் பயனில்லாமல் போனதால் மகாவிஷ்ணு ஆயுதம் இன்றி இருந்தார். எனவே, அச்சக்கரம் தனக்கு மீண்டும் கிடைக்க என்ன செய்வதென்று தேவர்களுடன் ஆலோசனை செய்தார். சிவனை வேண்டினால் சக்கரம் கிடைக்கும் என அறிந்து கொண்டார்.
சிவனை வணங்கி அருள்பெற "சிவதீட்சை' பெற வேண்டும் என்பது நியதி. எனவே அவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இத்தலம் வந்தார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனை எண்ணி தவம் செய்து வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், குருவாக இருந்து சிவதீட்சை செய்து வைத்து உபதேசம் செய்தார். மேலும், ""இத்தலத்திற்கு அருகில் உள்ள ஓர் தலத்தில் (திருமால்பூர்) லிங்க வடிவத்தில் இருக்கும் தன்னை ஆயிரம் மலர்கள் கொண்டு பூஜை செய்து வழிபட்டு வர உரிய காலத்தில் சக்ராயுதம் கிடைக்கப்பெறும்'' என்றும் கூறினார்.
அதன்படி மகாவிஷ்ணு, அருகில் உள்ள திருமால்பூர் சென்று சிவனை வணங்கி தவம் செய்து சக்ராயுதம்பெற்றார்.மகாவிஷ்ணுவிற்கு குருவாக காட்சி தந்த சிவன், இத்தலத்தில்"தெட்சிணாமூர்த்தியாக' அருளுகிறார்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்