Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 நவம்பர், 2011

சனிப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி- 2011

0 comments
  
  விருச்சிகம் 
 (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய) விருச்சிக ராசி வாசகர்களே! உங்களுக்கு லாபஸ்தானத்தில் அமர்ந்திருந்த சனி பகவான் உங்களுக்கு விரயச் சனியாகி அதாவது, அயன, சயன, மோட்ச ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். ஏழரை சனியைத் தொடங்கி முதல் கட்டமாக 15.11.2011 முதல் 15.5.2012 வரை துலாம் ராசியில் குரு பகவானின் பார்வையில் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் சனி பகவான் உங்கள் நண்பர்களின் குணாதிசயங்களை உங்களுக்குப் புரிய வைப்பார். அவர்களுக்கு நீங்கள் உதவி செய்வீர்கள். பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். அநாவசியச் செலவைத் தவிர்க்கவும். செய்தொழிலில் நல்ல முறையில் ஈடுபடுவீர்கள். உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்து செயல்படுத்துவீர்கள். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். இதன்மூலம் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த இடங்களிலிருந்து கடன்கள் கிடைத்து புதிய வீடு வாங்கும் யோகத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுப காரிய முயற்சிகள் வெற்றி பெறும். கிடைக்காது என்று நினைத்திருந்த சொத்து உங்களுக்குக் கிடைத்து அதன் மூலம் வருமானம் வரத் தொடங்கும்.
 16.5.2012 முதல் 80 நாட்கள் அதாவது 3.8.2012 வரை சனி பகவான் வக்கிர கதியில் கன்னி ராசியில் லாபஸ் தானத்தில் குரு பகவானின் பார்வையைப் பெற்று சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் உங்களின் பழைய முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கும்.
 எதிர்ப்புகள் இருக்காது. வெளிநாட்டுத் தொடர்பு பலப்படும்.
 வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உடல் நலம் சீராக இருக்கும். நண்பர்களுக்கு உதவிசெய்வீர்கள். அவர்களின் உதவிகளைப் பெறுவீர்கள். விருந்து, விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்கான சந்தர்ப்பங்கள் தேடி வரும்.
 4.8.2012 முதல் 2.11.2014 வரை மறுபடியும் துலாம் ராசியில் ஏழரை சனியாக சனி பகவான் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் செயல்களில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களின் வருகையால் நன்மைகள் உண்டாகும். என்றாலும் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் வீண் விரோதம் ஏற்படும். இதனால் அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். சிலருக்கு வெளியூர் சென்று தொழில் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் பூமி வாங்கும் யோகம் உண்டாகும். அதேசமயம் அதில் வீடுகட்டும் முயற்சியைத் தள்ளிப் போடவும். மற்றபடி தற்போது வசிக்கும் வீட்டைவிட வசதியான வீட்டுக்குக் குடி பெயர்வீர்கள்.
 31.5.2013க்குப் பிறகு சனி பகவானுக்கு குரு பகவானின் பார்வை கிடைக்கிறது. இந்தக் கால கட்டத்தில் செய்தொழிலில் பிரச்னைகள் குறையும். நிதானமாகப் பணியாற்றுவீர்கள். பதற்றம், அலைச்சல் இல்லாமல் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். நண்பர்களுடன் அனுசரித்துப் போவீர்கள். புதிய பயிற்சிகளைப் பெற்று உங்கள் திறமைகள் பளிச்சிடும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிரிகளை ஒடுக்கும் வல்லமையைப் பெறுவீர்கள். மனதில் உள்ள குழப்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு உங்கள் காரியங்களில் அக்கறை காட்டுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் எவருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். முன் ஜாமீனும் கொடுக்க வேண்டாம். மற்றபடி சட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்படாது.
 உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சிறிய குழப்பங்கள் ஏற்பட்டாலும் சக ஊழியர்களின் உதவியால் வெற்றியுடன் முடித்துவிடுவீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு உதவியாக இருப்பதால் பிரச்னைகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவில் இருக்கும். உழைப்பு வீண் போகாது.
 வியாபாரிகள் "கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் வியாபாரத்திலேயே குறியாக இருக்கவும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். கடன் கொடுக்காமல் கறாராகப் பேசி வியாபாரத்தை விரிவுபடுத்தவும். பழைய கடன்களை சீரிய முயற்சியின் பேரில் திருப்பிச் செலுத்திவிடுவீர்கள்.
 விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் அதிகரிக்கும். புதிய விவசாய உபகரணங்களை வாங்கி விவசாயத்தை நவீன மயமாக்குவீர்கள். கால்நடைகளால் நல்ல பலன்களைக் காண்பீர்கள். நிலத்தில் சலிப்பில்லாமல் உழைத்தால் மேலும் முன்னேற்றம் அடையலாம்.புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம்.
 அரசியல்வாதிகளுக்கு உயர் பதவிகள் தேடி வரும். தொண்டர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். உங்களின் எண்ணங்களை செயலாக்குவதில் தடைகள் ஏற்படாது. சிறப்பான அங்கீகாரம் பெற்று அதிர்ஷ்டசாலியாக வலம் வருவீர்கள். உங்களுக்கு எதிராகப் போடப்பட்ட சதிகளிலிருந்து விடுபடுவீர்கள்.
 கலைத்துறையினரின் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். புதிய நண்பர்களால் பெருமை அடைவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது துறையில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெறுவீர்கள். ரசிகர்களின் பேராதரவுடன் மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். திறமைகளை நல்ல முறையில் வெளிப்படுத்துவீர்கள்.
 பெண்மணிகள் ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். பண வரவு சீராக இருக்கும். கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உண்டாகும். உற்றார், உறவினர்களுடனான ஒற்றுமையைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.
மாணவமணிகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் மாணவராகத் திகழ்வீர்கள். சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மனதில் உற்சாகத்தைப் பெறுவீர்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.

 பரிகாரம்: ராம பக்த அனுமனை வழிபடவும். "ராம் ராம்' என்று ஜெபித்துக்கொண்டே அனுமனை சுற்றி வரவும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் "ஸ்ரீராமஜெயம்' என்று எழுதி வரவும். முடிந்தால் ஒரு முறை நாமக்கல் சென்று ஸ்ரீஆஞ்சநேயப் பெருமானை வழிபடவும்.

Continue reading >>

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011- கடக ராசி

0 comments
கடகம்
(புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
 கடக ராசி வாசகர்களே! உங்களின் மூன்றாம் ராசியில் சஞ்சரித்த சனி பகவான் சுகஸ்தான ராசியான நான்காம் ராசியில் 15.11.2011 முதல், முதல் கட்டமாக 15.5.2012 வரை துலாம் ராசியில் குரு பகவானின் பார்வையில் சஞ்சரிக்கிறார். இந்தக் கால கட்டத்தில் செய்தொழில் லாபகரமாகவே இருக்கும். புதிய மாறுதல்களைச் செய்து முன்னுக்கு வருவீர்கள். இழந்த அங்கீகாரத் தைப் பெறுவீர்கள். மனதில் இருந்த விபரீத எண்ணங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு நேர்வழியில் சிந்திப்பீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். கவர்ச்சியாகப் பேசி உங்களின் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். விடாமுயற்சியால் கடினமான வேலைகளையும் சுலபமாக முடித்துவீர்கள். எதிர்காலத்திற்காக புதிய சேமிப்புத் திட்டங்களில் இணைவீர்கள். 16.5.2012 முதல் 80 நாட்கள் அதாவது 3.8.2012 வரை சனி பகவான் வக்கிர கதியில் கன்னி ராசியில் குரு பகவானின் கனிவான பார்வையில் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் வழியில் தனிக்காட்டு ராஜாவாக பயணத்தை மேற்கொள்வீர்கள். உங்களின் எதிரிகள் மறைந்து போவார்கள். புதுப்பாதையில் புது வேகத்தில் உங்கள் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். நண்பர்களைப் பற்றிய சந்தேகங்கள் மறைந்து அவர்களை நன்றாகப் புரிந்துகொள்வீர்கள். தெய்வ பலத்தை அதிகரித்துக் கொள்ள ஆலய வழிபாட்டினை மேற்கொள்வீர்கள். இளையசகோதர, சகோதரிகளின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும்.
4.8.2012 முதல் 2.11.2014 வரை துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களின் செய்தொழிலில் தேவையில்லாத மாற்றங்களை ஏற்படுத்துவார். இதனால் மனதில் சிறு சஞ்சலத்திற்கு ஆளாவீர்கள். புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பீர்கள். மேலும் சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டாம். மனதில் காரணமில்லாத ஓர் அச்சம் குடிகொண்டிருக்கும். உடல் ஆரோக்யத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். மற்றபடி குடும்பத்தில் அமைதி நிறையும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.
 31.5.2013க்குப் பிறகு சனி பகவானுக்கு குரு பகவானின் அருட்பார்வை கிடைக்கிறது. இந்தக் கால கட்டத்தில் தீயவர்களைக் கண்டறிந்து விலக்கிவிடுவீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். பண வசதி அதிகரிக்கும். இல்லத்திற்குத் தேவையான உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். அசையும், அசையாச் சொத்துக்களைக் குறைந்த விலைக்கு வாங்குவீர்கள். உடல் நலம் சீராகும். விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொள்வீர்கள். கோர்ட் விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களிலிருந்து தொடர்ந்து வருமானத்தைப் பெறுவீர்கள்.உத்யோகஸ்தர்களுக்கு எதிர்ப்புகள் குறையும். மேலதிகாரிகளிடமும், சக ஊழியர்களிடமும் இணக்கமான சூழ்நிலை உருவாகும. சிலருக்கு அலுவலக வேலைகளில் எதிர்பார்த்த சாதகமான திடீர் திருப்பம் உண்டாகும். இதனால் வளர்ச்சியைக் காண்பீர்கள். மேலதிகாரிகளிடம் வீண் வாக்கு  வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். பண வரவிற்கு ஏதும் தடை ஏற்படாது. அவசியம் ஏற்பட்டாலொழிய அலுவலகரீதியான பயணங்களைத் தவிர்க்கவும்.
 வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் இந்தக் காலகட்டத்தில் சில முடிவுகளை தனித்தே எடுக்கவும். மற்றபடி எதிர்பார்த்த வங்கிக்கடன்கள் கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வராது என்று நினைத்திருந்த பணம் உங்கள் கை வந்து சேரும். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்க நினைப்பீர்கள். உங்கள் பேச்சினால் எவருடனும் விரோதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
 விவசாயிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். புதிய குத்தகைகள் தேடாமலேயே கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். புதிய பயிர் உற்பத்தியில் இறங்குவீர்கள். பூச்சிக்கொல்லிகளை சரியான நேரத்தில் பயன்படுத்தி உற்பத்தியில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்யும் விவசாயக் கூலிகளைக் கடிந்து கொள்ள வேண்டாம்.
 அரசியல்வாதிகளுக்கு பெயரும், புகழும் உயரும். செயல்களில் வெற்றி காண்பீர்கள். கவனத்துடன் செயல்பட்டு கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் காரியங்களைச் செய்வீர்கள். கட்சி மேலிடத்தின் உத்தரவிற்குப் பிறகே மக்களின் முக்கியப் பிரச்னைகளில் கருத்தைத் தெரிவிக்கவும். மற்றபடி தொண்டர்களின் ஆதரவு உங்களுக்கு நல்ல முறையிலேயே இருக்கும்.
 கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனாலும் எதிர்பார்த்த பெயரும், புகழும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பொறுமையுடனும், கவனத்துடனும் உங்கள் வேலைகளைச் செய்வீர்கள். வருமானத்திற்குக் குறைவு ஏற்படாது. சிலருக்கு விருதுகள் கிடைக்கும். சக கலைஞர்களுக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்வீர்கள்.
 பெண்மணிகளுக்கு பண வரவு நன்றாக இருக்கும். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தர்மகாரியங்களிலும் ஈடுபடுவீர்கள். பழைய கசப்புகளை மறந்து உறவினர்களுடன் இன்பமாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.
 மாணவமணிகள் சிறு சிறு குழப்பங்களைச் சந்திப்பீர்கள். நண்பர்களுடன் வம்பு, சண்டைகளில் ஈடுபட வேண்டாம். படிப்பில் முழு அக்கறை காட்டினால்தான் சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற முடியும்.
 பரிகாரம்: ஸ்ரீ ராமரை வழிபடவும். முடிந்தால் ஒருமுறை மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்த ராமபிரானை வழிபட்டு வரவும். 
Continue reading >>

சனிப்பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி- 2011

0 comments
(மகம், பூரம்,உத்திரம் முதல்  பாதம் முடிய)
 சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே!உங்களுக்கு ஏழரை நாட்டு சனி முடிந்து தைரியஸ்தான ராசியான மூன்றாம் ராசியில் 15.11.2011 முதல், முதல் கட்டமாக 15.5.2012 வரை துலாம் ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் குரு பகவானின் பார்வையில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களின் எதிரிகளையும் உங்கள் வசப்படுத்தும் ஆற்றலைத் தருவார். செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் மறையும். உங்கள் தொழில் நல்ல முறையில் வளர்ச்சி அடையும். வெளியில் கொடுத்திருந்த கடன்கள் வசூலாகும்.அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சலுகைகள் திடீரென்று உங்களுக்குக் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து உபகரணங்களை இறக்குமதி செய்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உற்றார்,உறவினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டிற்குச் சென்று தொழில் செய்யும் வாய்ப்புகளும் உண்டாகும்.
 16.5.2012 முதல் 80 நாட்கள் அதாவது 3.8.2012 வரை சனிபகவான் வக்கிர கதியில் கன்னி ராசியில் குரு பகவானின் பார்வையைப் பெற்று சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் சுய மரியாதையை எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்காமல் பணியாற்றுவீர்கள்.உங்களின் புத்திசாலித்தனத்துடன் ஞாபக சக்தியும் அதிகரிக்கும். நீங்கள் விரோதியாக நினைத்திருந்தவர்கள் மனம் மாறி உங்களுடன் நட்பு கொள்வார்கள். உங்களுக்கு உதவி செய்வார்கள். கடினமான காரியங்களையும் விரல் சொடுக்கும் நேரத்தில் முடித்து விடுவீர்கள். உங்களின் பெயரும், புகழும் உயரும். பழைய வழக்குகளில் எதிராளிகள் சமாதானம் ஆவார்கள். உங்கள் தேக ஆரோக்யமும், குடும்பத்தினரின் தேக ஆரோக்யமும் சீராக இருக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது.
 4.8.2012 முதல் 2.11.2014 வரை துலாம் ராசியில் மறுபடியும் சஞ்சரிக்கும் சனி பகவான் அவ்வப்போது மனதில் தெளிவற்ற நிலையை உண்டாக்குவார். சிறிய விஷயங்களுக்கும் சட்டென்று கோபப்படுவீர்கள். உங்கள் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடிக்க சிரமப்படுவீர்கள். எனவே இந்தக் காலகட்டத்தில் சரியாகத் திட்டமிட்டு செயலாற்றவும். மேலும் பிறரிடம் பேசும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றபடி நண்பர்கள் உங்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள். உற்சாகமான மனநிலையுடன் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். உற்றார், உறவினர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்.
 31.5.2013க்குப் பிறகு சனி பகவானுக்கு குரு பகவானின் அருட் பார்வை கிடைக்கிறது. இந்தக் காலகட்டத்தில் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். தாமதமான கட்டுமானப் பணிகளை மீண்டும் துவக்கி நல்லபடியாக முடித்துவிடுவீர்கள். குடும்பத்தில் நிலவும் பூர்வீகச் சொத்து விஷயங்களில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான பாகப் பிரிவினை ஏற்படும். பண வருவாய் இரட்டிப்பாகும்.
 இதனால் புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபடுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் ஏற்றமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைந்துவிடும்.
 உத்யோகஸ்தர்களுக்கு கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இடமாற்றங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். சம்பள உயர்வால் சந்தோஷம் அடைவீர்கள். அலுவலகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் வெற்றியடையும். சக ஊழியர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். அவர்களுடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளுக்கும், நல்லெண்ணங்களுக்கும் ஆளாவீர்கள். அலுவலகரீதியான பயணங்களால் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும்.
 வியாபாரிகள் போட்டி, பொறாமைகள் குறைந்து சுமுக நிலையைக் காண்பீர்கள். என்றாலும் கவனத்துடன் இருந்து வியாபாரத்தை விரிவுபடுத்தவும். கொடுக்கல், வாங்கலில் சிறு சிரமங்கள் உண்டாகலாம். எனவே வரவு, செலவுகளில் கவனமாக இருக்கவும். சில சமயங்களில் நண்பர்களிடமும், கூட்டாளிகளிடமும் மனக் கசப்புகள் ஏற்படலாம். ஆகவே புதிய முயற்சிகளில் எச்சரிக்கை தேவை. விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது. மேலும் அனைத்து விவசாயப் பணிகளும் தடையுடனே வெற்றி பெறும். மற்றபடி காய்கறிகளாலும், பால் வியாபாரத்தாலும் லாபத்தைக் காணலாம். கால்நடைகளின் பராமரிப்புச் செலவு குறையும். குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். புதிய அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். வயல், வரப்பு பிரச்னைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
 அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். அதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். உங்களின் வேலைகளை சிரமமின்றி முடித்துவிடுவீர்கள். தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் அரவணைப்பும் இருப்பதால் உங்களின் எண்ணங்கள் ஈடேறி புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வீண் பேச்சுகளிலும் வாக்குவாதங்களிலும் ஈடுபட வேண்டாம்.
கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்களை முடித்துக்கொடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் சரியாக முடித்துக்கொடுத்து விடுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களின் திறமைகள் வெளி உலகுக்கு வெளிப்படும். ரசிகர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மனதில் இனம்புரியாத சஞ்சலம் சூழும். எனவே இறை வழிபாட்டைத் தொடருங்கள்.
 பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உங்களின் பக்குவமான பேச்சினால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். குடும்பத்திலும் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
மாணவமணிகளுக்கு படிப்பில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் வெற்றி பெறுவீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு உங்கள் பாடங்களை உடனுக்குடன் முடித்து மதிப்பெண்களை அள்ளுங்கள். உடற்பயிற்சிகளையும், யோகா போன்றவற்றையும் மேற்கொள்ளுங்கள்.
 பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டு வரவும். முடிந்தால் ஒரு முறை திருவல்லிக்கேணி சென்று பார்த்தனுக்கு தேரோட்டிய ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளை வழிபடவும்.
Continue reading >>